×

செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் குவிந்த 10,000 நெல் மூட்டைகள்

செஞ்சி, மே 7: விழுப்புரம் மாவட்டம், செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நேற்று ஒரே நாளில் மட்டும் 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்காக குவிந்தன. செஞ்சி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் சம்பா அறுவடை முடிந்து கடந்த சில நாட்களாக குறுவை பட்டம் அறுவடை தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனால் கடந்த சில நாட்களாக குறைந்தளவே நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விவசாயிகள் அறுவடை செய்த நெல் மூட்டைகளை விற்பனைக்காக மார்க்கெட் கமிட்டிக்கு கொண்டு வந்துள்ளனர். நேற்று காலை 10 ஆயிரம் நெல் மூட்டைகள் விற்பனைக்கு வந்தது. விற்பனைக்கு வந்த நெல் மூட்டைகளை 320 லாட், அதாவது 5 ஆயிரம் மூட்டைகள் மட்டுமே விற்பனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. மீதமுள்ள நெல் மூட்டைகளை நாளை (இன்று) ஏலம் எடுத்து கொள்ளப்படும் என நிர்வாகம் அறிவித்துள்ளது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து அதிகளவு நெல் மூட்டைகள் செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் குவிந்ததால் அதிக வரத்து ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது அறுவடையான குண்டு நெல், சன்னரகமான ஆர்என்ஆர், மகேந்திரா உள்ளிட்ட நெல் மூட்டைகளும் விற்பனைக்காக வந்துள்ளன. குண்டு நெல் 75 கிலோ ஒரு மூட்டை ரூ.1,500 முதல் 1,700 வரையிலும் சன்னரகங்கள் ரூ.1,500 முதல் 1,750 வரையிலும் விற்பனை ஆகிறது. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு விவசாயிகளுக்கு நெல் மூட்டை ஒன்றுக்கு கூடுதலாக ரூ.500 முதல் 700 வரை விற்பனையாவது குறிப்பிடத்தக்கது.

The post செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் குவிந்த 10,000 நெல் மூட்டைகள் appeared first on Dinakaran.

Tags : Senchi Market Committee ,Senchi ,Villupuram ,Dinakaran ,
× RELATED செஞ்சி அருகே வாலிபர் மர்ம சாவு